கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அப்போது, "கரூர் மாவட்டம் முழுவதும் தொலைபேசி மூலம் அழைத்து உதவி கேட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியதை ஆளுங்கட்சியினர் தடுத்தார்கள். தற்போது, ரூ. 3 கோடி மதிப்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்கிவருகிறோம். ஊரடங்கு காலத்தில் அவசர சிகிச்சைக்காக 366 பேர் ரத்த தானம் செய்துள்ளனர்" என்று கூறினார்.
மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகம் இதுவரை பயன்படுத்தவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனக் கூறிய அவர், உணவு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை என்றும், ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்தாமல் மக்களை அதிமுக அரசு வஞ்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் பார்க்க: கரோனா பாதிப்பு - தொழிலதிபர்களுடன் காணொலியில் உரையாடுகிறார் முதலமைச்சர்