கரூர் மாவட்ட திமுக சார்பில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூன்றாவது நாளாக இன்று உப்பிடமங்கலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, ” கரூர் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, புதிய பேருந்து நிலையப்பணிகள் நடைபெற ஒருவர் தடையாக இருப்பதாக சூசகமாக பேசியுள்ளார்.
புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்திற்கு அருகே போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நிலம் இருப்பதால், நீதிமன்ற உத்தரவையும் மீறி, அங்கு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிந்தே இது நடைபெறுகிறது. நீதியையோ சட்டத்தையோ மதிக்காத அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது.
நீட்தேர்வை முதலில் தமிழகத்தில் அனுமதித்தது அதிமுக அரசு. திமுக-காங்கிரஸ் கூட்டணி காலத்தில் நீட் தேர்வை அனுமதிப்பதற்கு மாநில அரசுகள் விரும்பினால் அனுமதித்து கொள்ளலாம் என மசோதாவில் கூறப்பட்டிருந்தது. தற்போது மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக நீட் தேர்வை தமிழகத்தில் நுழைத்தது அதிமுக அரசுதான் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை யாராலும் தடுக்க முடியாது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்