கரூர் வாக்குப்பதிவு மையத்தில் கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் இளங்கோ ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.
நேற்றிரவு (ஏப். 18) வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் கணினிகள், இணையதளம், வைஃபை உள்ளிட்டவை இயங்கியதால் சந்தேகமடைந்த திமுகவினர் புகாரளித்தனர்.
நள்ளிரவில் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
இதையடுத்து, இன்று (ஏப். 19) கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தபிறகு பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், சுற்று வட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.
கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டும். கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்கு எண்ணிக்கை 14 மேசைகள் என்பதை 28 மேசைகளாக அதிகப்படுத்த வேண்டும்.
கரோனா காலத்தைக் கருத்தில்கொண்டு அதிக முகவர்கள் கூடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்
வாக்கு எண்ணும் அறைக்கு அருகே ஆளில்லாத அறைகளில் கணினிகள் பயன்படுத்தப்பட்டது குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அலுவலர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். இதில் மெத்தனப்போக்கைக் காட்டக்கூடாது என்ற வேண்டுகோளை வைத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.