கரூர்: காவிரி ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள 2,15,870 கன அடி தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. இதேபோல அமராவதி ஆற்றில் 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைக்கண்காணிக்க கரூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கைத்தறித்துறை ஆணையரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் இன்று ஆய்வு மேற்கொள்ள கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
வெள்ள அபாய எச்சரிக்கை: கரூர் அமராவதி ஆண்டாங்கோயில் தடுப்பணை அமைந்துள்ள பகுதியை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து காவிரி ஆற்றில் தாழ்வான பகுதியாக உள்ள புகலூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மாயனூர் கதவணைப்பகுதியில் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்தும் கதவணையின் வலுதன்மை குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி. ராஜேஷ், 'கரூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு, தாழ்வானப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை கரூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்று வெள்ளப்பெருக்கினை எதிர்கொள்வதற்குத் தயாரான நிலையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்புப்பகுதிகளில் கனமழை பெய்தால் அடுத்து கட்ட நடவடிக்கைகளாக எதையும் எதிர்கொள்வதற்குத் தகுந்த வழியில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மந்த்ராசலம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், மாயனூர் கதவணை பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:Live: செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் வீரர்களுக்காக சிறப்பு கலை நிகழ்ச்சிகள்!