கரூர் - வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில், அடர் வனத்தோட்ட தொடக்க விழா மற்றும் சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், ஓனவாக்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 44 மாணவ - மாணவியருக்கு கல்விக்காகவும், பூங்கா விரிவாக்க பணிகளுக்காகவும் 18.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலை வழங்கும் விழா மற்றும் காகித நிறுவனத்தின் அலகு II ஆலை விரிவாக்கம் குறித்த ஆய்வு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காகித ஆலை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவசண்முகராஜா, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
காகித ஆலை குடியிருப்புப் பகுதியில் 110 வகையிலான 4 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் தொடக்கவிழா நிகழ்ச்சி, அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நடைபெற்றது.
மேலும், 2020-21 கல்வியாண்டில் 44 மாணவ - மாணவிகள் கல்வி செலவுக்காக 12.36 லட்ச ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனப் பள்ளி முதல்வரிடம் இரு துறை அமைச்சர்கள் வழங்கினர்.