கரூர்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று (பிப்ரவரி 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் தலைவரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பூபதி பேசுகையில், “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் கணினி வழித் தேர்வுக்கு வேறு மாவட்டங்களில் பணி வழங்குவதால், தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்து 10 நாள்கள் தங்கி பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நலனுக்கு எதிராகவும், ஜனநாயகமற்ற எதேச்சதிகாரமாக நடந்துகொள்ளும் தமிழ்நாடு ஆசிரியர் வாரிய தலைவரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பார்வையாளர்களாகவும், கணினி ஆசிரியர்களை தொழில்நுட்ப உதவியாளர்களாகவும் நியமிக்கப்படுவதை ரத்துசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு நியமிக்கப்படும் கணினி ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் பணி ஆணைகள் வழங்குவதில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காணொலிக் கூட்டங்களில், கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களை கண்ணியக் குறைவான சொற்கள் மூலம் ஒருமையில் பேசி மிரட்டும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு எதிரான கருத்தை நீக்கிய நீதிபதிக்கு பிரிவு உபசார விழா