கரூர்: மாநகராட்சியில் நேற்று (மார்ச் 4) காலை 9 மணியளவில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள திமுகவின் 45 உறுப்பினர்களின் பேராதரவுடன் கரூர் மாநகராட்சி முதல் பெண் மேயராக கவிதா கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவருக்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் செங்கோல், பாரம்பரிய சிவப்பு அங்கி, தங்க சங்கிலி ஆகியவை வழங்காததால் தேர்வு செய்யப்பட்ட திமுக மேயர் கவிதா கணேசன் காத்துக் கிடந்தார். பின்னர் மேயர் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். சுமார் நான்கு மணி நேரமாக காத்திருந்த மேயர் கவிதா கணேசன் திமுக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை பெற்றபின்னர் கிளம்பிச் சென்றார்.
இது குறித்து கரூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அனைத்து உபகரணங்களும் தயாராக இருப்பதாகவும், மாநகராட்சி துணை மேயர் தேர்வுக்கு பின்னர் மேயர் பதவியேற்பு விழாவில் பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
ஆனால் உண்மையில், மின்சாரத்துறை அமைச்சர் கோவையில் மேயர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இருப்பதால் மேயருக்கு வழங்கவேண்டிய பாரம்பரிய முறைப்படியான வரவேற்ப்பு வழங்க முடியாததும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இருந்து திரும்பியதும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசனுக்கு செங்கோல் வழங்கி பதவியேற்பு நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில் மதியம் 2 மணியளவில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மேயராக தேர்வு செய்யப்பட்ட கவிதா கணேசனுக்கு செங்கோல் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் துணை மேயராக தேர்வு செய்யப்பட்ட தாரணி சரவணனும் உடனிருந்தார்.
இதுகுறித்து மேயர் தரப்பிடம் கேட்டபோது, காலை நல்ல நேரம் நிறைவு பெற்றதால் மதியம் பதவி ஏற்றுக் கொண்டதாக சமாளித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர் - ஆத்திரத்தில் அலுவலகத்தை சூறையாடிய திமுகவினர்