தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று கரூரில் நடைபெற்றது. இதில் கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அண்ணாநகர், திட்ட சாலை, விவிஜி நகர், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
இந்நிகழ்வில் பேசிய விஜயபாஸ்கர், "தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் 25,000 ரூபாய் மானியத்தில் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாயனூர் கதவணை போல காவிரியின் குறுக்கே புஞ்சை புகலூரில் 1.4 டிஎம்சி தண்ணீரைச் சேர்க்கும் அளவுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வெங்கமேடு பகுதியில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் பிரச்னையை விரைவில் தீர்க்க, தனிகுழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலின் பேரில் கரூர் நகர்ப்பகுதி முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.