தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில், கரோனா சிறப்பு நிவராண நிதி வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 10ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு, மே 15ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணைத் தொகையாக, ரூபாய் 2000 வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் கீழ் செயல்படும், 592 நியாய விலைக் கடைகளில் மொத்தம் 3,10,941 அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் அரிசி அட்டைதாரர்களான 2,78,893 பேருக்குத் தலா ரூ.2000 என சுமார் 55 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவித் தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தென்னிலை, பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.இளங்கோ தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து உள்ளூர்வாசி தனலட்சுமி கூறுகையில், "முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்பொழுது பதவியேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உதவித் தொகையை வழங்கியுள்ளது. மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு நிவாரணத் தொகையை வழங்கியிருந்தால், அவை குடும்பத்திற்கு பயனற்றதாக ஆகியிருக்கும். பெண்களின் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நிதி உதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி'' எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக முனைவர் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் பணியாற்றி வேலை இழப்பை சந்தித்துள்ள சந்தோஷ் குமார் கூறுகையில், "கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளேன். எனது பெற்றோர் நடத்தி வரும் சிறுதொழிலுக்கு உதவியாக இருக்கிறேன். தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், வருங்காலத்தில் செலவுகளை சமாளிக்க பொதுமக்களுக்கு வருவாயை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்றார்.
அதே போல, தரைக் கடை வியாபாரம் செய்யும் சாந்தி கூறுகையில், "கரோனா ஊரடங்கு காரணமாக தரைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். வியாபாரத்திற்காக வாங்கிய பொருட்கள் விற்பனையாகாமல் கிடப்பதால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். 4000 உதவித்தொகையானது, பெரும் உதவியாக உள்ளது" என்றார்.
கடந்தாண்டு முழு ஊரடங்கின்போது அப்போதைய அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கியது. அப்போதே, 5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. அப்போது கோரிக்கையாக வைத்ததை, தற்போது ஆட்சிக்கு வந்ததும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு செய்து அசத்தியுள்ளது. இத்திட்டத்தை கரூர் மாவட்ட மக்கள், பெரிதும் வரவேற்கின்றனர்.