கரூர்: குளித்தலை பேருந்து நிலையம் அருகே குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் நிரோஷா, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) வேட்பாளர் கதிர்வேல் ஆகியோரை ஆதரித்து அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நேற்று (மார்ச்.22) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை சொல்லியுள்ளது. வீட்டில் ஒருவருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். இது எங்களுக்கு முதல் படி. எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி, அனைவரும் நிம்மதியாக வாழும் சூழல், சம உரிமை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவை ஏற்படுத்தி தரப்படும். தரமான ரேசன் பொருள்கள் வீடு தேடி கொண்டு வந்து தரப்படும்.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையான மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம், மின்மயானம், நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், காவிரி ஆற்றில் தடுப்பணை, தீயணைப்பு நிலையம், விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக, தேமுதிக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின்போது அமமுக நிர்வாகிகளும் தேமுதிக நிர்வாகிகளும் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குளித்தலை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு டிடிவி தினகரன் திருச்சி, ஸ்ரீரங்கம் நோக்கி சென்றார்.
இதையும் படிங்க: வாங்க... வாங்க.. வாஷிங் மெஷின், கேஸ் சிலிண்டர் இலவசம் : கட்சிகளின் போட்டி வாக்குறுதிகள்