கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை, கரூர் மாவட்டத்தில் 140 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அரசு மருத்துவமனையில் 41 நபர்கள் கரோனாவில் இருந்து மீண்டு வர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் புன்னம்சத்திரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த 48 வயதுடைய நபர் ஒருவர், கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் கிளீனிக் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், காய்ச்சல் சரியாகாததையடுத்து, கடந்த 27ஆம் தேதி கரூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல், கரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.