ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி பெருக்கெடுத்து வருவதுதான் சிறப்பு. காவிரியில் நீராடி இந்த பருவத்தில் கிடைக்கக்கூடிய நாவல் பழம், பேரிக்காய், வாழைப்பழம், கொய்யாப்பழம், காதாலகருகமணி போன்ற பொருள்களை வைத்து வாலான் அரிசி, வெல்லம் கலந்து காவிரி தாய்க்கு படையலிட்டு வணங்குவது வழக்கம்.
இது போன்ற தருணங்களில் தங்களது வாழ்வும், விவசாயம் சார்ந்த தொழிலும் சிறந்து விளங்கி மக்கள் பஞ்சம் பட்டினி இன்றி வாழவேண்டுமென காவிரியை வணங்கி வருவார்கள். நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் இதுபோன்ற நிகழ்வானது தற்போது நடப்பாண்டில் இந்த கரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) ஆடிப் பெருக்கு வந்ததால் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரி தாயை வணங்க முடியாத ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதி நந்தகுமார் - திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டிலேயே ஆடிப் பெருக்கை கொண்டாடி, தங்களது திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நாட்களில் பயன்படுத்திய மாலைகளை குளித்தலை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
இது குறித்து இளம்பெண் திவ்யா கூறுகையில், ”கரோனா அச்சம் இந்த உலகை விட்டு விலக வேண்டும். உலக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என காவிரி தாயிடம் வேண்டியதாக” தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: ஈரோட்டில் களையிழந்த ஆடிப்பெருக்கு