கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது; "மத்திய, மாநில அரசுகள் இ-பாஸ் ரத்து போன்ற பல தளர்வுகளை அறிவித்துள்ளன. எனவே, அதிக அளவில் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதால், அதன் மூலம் தொற்று ஏற்படாமல் இருக்க கட்டாயம் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பேருந்துகளை தினம்தோறும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் கவிதா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.