கரூர்: கரூர் நகரப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக வலுவூட்டல் முகாம் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் காமாட்சி தலைமையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி எம்.பி., ”கரூர் மக்களவைத் தொகுதியில் முதல்முறையாக அதிகபட்சமாக முகாம்கள் நடத்தி 1,640 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.35 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரே நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது எனது கரூர் தொகுதியில் தான். இதற்காக நான் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்த உதவியை மத்திய அரசு திட்டம் மூலமாக வழங்கும் அலிக்கோ எனும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விடுபட்டு உள்ளவர்களுக்கு மீண்டும் முகாம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்” என்றார்.
மேலும், மக்களவையில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை உள்ளது என பிரதமர் விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதில் அளித்த ஜோதிமணி, ”மக்களவையில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நாங்கள் தீவிரமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
மக்களவைக்கே பிரதமர் வராததால் எதிர்க்கட்சிகள் இருப்பது தெரியாமல் போயிருக்கும். எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் சார்பில் தயவு செய்து மக்களவைக்கு வாருங்கள். எதிர்க்கட்சிகளைப் பாருங்கள் என பிரதமரை அழைக்கிறோம்” என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சி பிரச்னை குறித்து விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்னைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதற்கான தகுதியும், திறமையும் எங்களுக்கு இருக்கிறது. ஒரு நாட்டையே பாஜக அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.410க்கு விற்ற சமையல் கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,100, ரூ.60க்கு விற்ற பெட்ரோல் ரூ.110க்கு அதிகமாகவும், ரூ40க்கு விற்ற டீசல் ரூ.103 நெருங்கியும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் விரோத, மக்கள் வெறுக்கிற ஆட்சி நடத்திக்கொண்டு மக்களவை நடந்தால் எதிர்க்கட்சி விமர்சனம் செய்து பேசுவதற்கு பயந்து ஊழல், ஒட்டுக்கேட்பு, வெட்கக்கேடு ஆகிய வார்த்தைகளை மக்களவையில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கட்சியின் மாநிலத்தலைவர் காங்கிரஸ் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை” எனப் பதில் அளித்தார் ஜோதிமணி.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோது, பிரதமரின் வயதுக்கு சமமாக இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்துவிட்டதாக விமர்சித்தனர்.
தற்போது பிரதமரின் வயதை விட அதிகமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. தவறான பொருளாதார கொள்கை காரணமாக ஒரு நாட்டை வெறுப்பு அரசியல் நோக்கி நடத்துகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, நாடு வளர்ச்சி, மக்கள் பிரச்னைகள், தேவைகள் பற்றியோ, தீர்வுகள் பற்றியோ பேசுவதில்லை.
மத, வெறுப்பு, பிரிவினை அரசியல் தான் கடந்த 8 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வருகிறது. அதன் விளைவுதான் மோசமான பொருளாதார பிரச்னையைச் சந்தித்துள்ளோம். இலங்கையில் ராஜபக்சவை கடவுள் என்றே சிங்களர்கள் கூறி வந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் ராஜபக்ச அரசு இனவாதத்தின் பெயரால் சூறையாடிய போது சிங்களர்கள் மவுனசாட்சியாக இருந்தார்கள்.
ஆனால், இன்று இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை 2000 ரூபாய் வரை விற்பனையாகிறது. உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு சிங்களர்கள் கொதித்தெழுந்து ஒரு நாட்டின் அதிபரையே நாட்டை விட்டு விரட்டி உள்ளார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார சூழலுக்கு வெறுப்பு, மத, பிரிவினை அரசியல் தான் காரணம்.
அதை நோக்கிதான் பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவை தள்ளிக்கொண்டு போகின்றனர். அப்படி ஒரு சூழல் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என காங்கிரஸ் முனைப்பாக இருக்கிறது. பிரிவினைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ’இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ என ஒரு யாத்திரையை ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 3,500 கி.மீ தூரம் பாதயாத்திரையாக நடத்துகிறது.
பாத யாத்திரை செல்லாத பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்தியாவை ஒருங்கிணைக்க, காப்பாற்ற, இந்தியப் பொருளாதாரத்தை அமைதியை மீட்டெடுக்க, பாஜக, ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து இந்திவை மீட்டு, மிகச்சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் அமைக்கும். இது இந்தியாவுக்கு 2ஆவது சுதந்திரப் போராட்டம் என இதை நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பொருளாளர் மெய்ஞான மூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், கரூர் மாவட்ட துணைத் தலைவர் கோகுல், கரூர் நகர தலைவர் வெங்கடேஷ், கரூர் மாவட்ட துணை தலைவர் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் மலையாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்