கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணபுரத்தில் மக்களவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கரூர் எம். பி. ஜோதிமணி குத்து விளக்கேற்றினார்.
காலணி தைக்கும் தொழிலாளர்களான ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் அலுவலகத்தை திறந்துவைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம். பி. ஜோதிமணி, “எளிய மக்களின் அலுவலகமாக எம்.பி அலுவலகம் இருக்க வேண்டும் என்பதற்காக காலணி தைக்கும் தொழிலாளர்ளைக் கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்ததாக தெரிவித்தார்.
மேலும் காவிரி ஆறு பாயும் மாவட்டங்களான கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மறுத்த அதிமுக அரசுக்கு தன் கண்டனங்களைத் தெரிவித்த அவர், விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்தும், சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
”தம்மை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் முதலமைச்சரும், அமைச்சர்களும் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் வகையில் மூன்று மாவட்டங்களை புறக்கணித்து வருகின்றனர்.
விவசாயிகளின் பாதுகாவலன் எனத் தெரிவித்துவரும் இந்த அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கள்ள மௌனம் சாதித்து வருகிறது” எனவும் அவர் குற்றம் சாட்டினார்
தொடர்ந்து பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை, சட்டப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவேன்” எனவும் தெரிவித்தார்.
மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய மூன்றும் ஒன்றுதான். மூன்றுக்கும் ஒன்றுக்குக்கொன்று தொடர்பிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி, திமுக மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’