கரூர்: மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவி நவம்பர் 19ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவி எழுதிய டைரிக் குறிப்பு ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா?
மாணவிக்குப் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே காவல் துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி தொடர் போராட்டங்களை கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் போராட்டம்
இதனையடுத்து இன்று (நவ.24) கரூர் பேருந்து நிலையத்தில் காலை 9 மணி அளவில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தை சிறைப்பிடித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்களிடம் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி வேண்டும் எனக்கேட்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 97 மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாணவர்கள் கைது சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட 97 மாணவர்களை காவல் துறையினர் விடுவித்தனர்.
அடுத்தடுத்து போராட்டம்
இதன்தொடர்ச்சியாக கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் கரூர் எஸ்பி சுந்தரவடிவேல் ஆகியோர் மாணவர்களை காளியப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தித்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில், தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நான்கு நாள்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் கரூர் நகரின் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை