கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 3000 சதுர அடி பரப்பளவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி முதல் கட்டமாக கரூர் நகர் பகுதியில் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின்பேரில் கோவை சாலை, ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் 12 வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கரூர் ஜவகர் பஜார், கோவை சாலையில் செயல்பட்டுவரும் பிரபல ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொரகள்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .
இதேபோல கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை நகராட்சிக்குள்பட்ட கடைவீதி பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல பாத்திரக்கடை, பெரிய ஆண்டவர் தெருவில் செயல்பட்டுவரும் பிரபல துணிக்கடை பகுதிகளில் நகராட்சி ஆணையர் முத்துக்குமார் உத்தரவின்படி, குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று ஊழியர்களையும், பொதுமக்களையும் வெளியேற்றி கடையை பூட்டி வர்த்தக நிறுவனம் செயல்பட அனுமதி மறுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பொருள்கள் வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அங்கு பணியாற்றிவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.