ஆபத்தான சாகசங்களைச் செய்து பிழைப்பு நடத்திவருபவர்கள் சர்க்கஸ் தொழிலாளர்கள். குதிரை, ஒட்டகம், குரங்கு போன்ற விலங்குகளுக்கும் வித்தையைப் பழக்கி, அவற்றையும் தங்களோடு ஊர் ஊராக அழைத்துச் சென்று வேடிக்கை காட்டும் இவர்களுக்கு இந்த கரோனா நெருக்கடி எதிர்பாராத ஒன்று.
கரோனா நெருக்கடியில் அனைவருமே வீட்டுக்குள் கூண்டுப் பறவை போல அடைபட்டிருக்கும் சூழலில், சர்க்கஸ் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீளும் நாள் தெரியாமலேயே முடங்கிப் போனது.
தனியாகவோ, குழுவாகவோ சாலைகளில் சில வித்தைகளை செய்து பார்வையாளர்களை ஈர்க்கும் இவர்களுக்கு வெறிச்சோடிய சாலைகள் பெரும் ஏமாற்றமே. கோயில் திருவிழாக்களில் அமைக்கும் சர்க்கஸ் கூடாரங்கள் தொடங்கி, பள்ளிகளுக்குச் சென்று செய்யும் சாகசங்கள் வரை அனைத்தும் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும். காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் சர்க்கஸ்காரர்கள் தற்போது சந்திக்கும் இன்னல்கள் குறித்து கேட்டோம்.
கரூரை அடுத்த நத்தமேடு பகுதியில் உள்ள குந்தானிபாளையத்தில் புறம்போக்கு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் சர்க்கஸ் குடும்பம் சரோஜாவுடையது. இவர் பரம்பரையே சர்க்கஸ் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள கிராம பகுதியைத் தேர்ந்தெடுத்து சில காலம் சர்க்கஸ் செய்வது இவர்களது தொழில் முறை.
இது குறித்து சர்க்கஸ் நடத்தும் சரோஜா (48) கூறுகையில், “நகரங்களில் நெருக்கடியான பகுதியாக இருக்கும். பாதுகாப்புக்கும் உறுதியளிக்க முடியாது. அதனால் கிரமாங்களில்தான் பெரும்பாலும் கூடாரங்கள் அமைப்போம். கரோனா நேரத்தில் தொழிலை எப்படி செய்வது என தெரியாமல் திகைத்துவிட்டோம். கரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட அய்யர் மலை பகுதியில் சித்திரை திருவிழாவிற்காக சென்றோம். தற்பொழுது தாளியாம்பட்டியில் முடங்கியுள்ளோம்.
தற்போது வரை வீடு திரும்ப முடியவில்லை. சொந்த மாவட்டத்திலேயே, சொந்த ஊர் செல்ல முடியாமல் இருக்கின்ற எங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே உணவு பொருட்களைத் தந்த அரசு, மீதமுள்ள மாதங்கள் குறித்து சிந்திக்க மறந்துவிட்டது” என்கிறார் குரலில் வருத்தம் மேலோங்க.
சர்க்கஸ் தொழிலாளர் மூர்த்தி கூறுகையில், “கடந்த நான்கு மாதங்களாக தாளியாம்பட்டியில் வசித்து வருகிறோம். சொந்த ஊரான நத்தமேடு பகுதிக்கு செல்ல முடியாமல் கிடைத்த வேலையை செய்து பிழைக்கிறோம். வெறும் இருநூறு முன்னூறு ரூபாய்க்கு வேலை செய்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், சர்க்கசில் இருக்கும் ஒட்டகம், குதிரை, குரங்கு போன்ற விலங்குகளுக்கும் உணவளிக்கிறோம். யாராவது உதவி செய்ய முன்வருவார்களா என காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
பார்வையாளர்களை பரவசத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்ற தொழிலாளர்கள், தற்போது வாழ்வாதாரத்திற்கே சிரமப்பட்டு வருகின்றனர். சாகசங்களின்றி சோர்ந்து போன சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு அரசுதான் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.
இதையும் படிங்க: ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சர்க்கஸ் தொழிலாளர்கள் !