கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆக்ஸிஜன் பேருந்தை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கரூர் கிளையினர், மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் நேற்று வழங்கினர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு வழங்கப்பட்ட இந்த வாகனம் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ளது.
நன்கொடை வழங்கிய தொழில் அமைப்புகள்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சமுதாயக் கூடத்தில் 156 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடுதல் சிகிச்சை மையம் உருவாகிவருகிறது. இதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கவும், சிகிச்சை மையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் சிஐஐ, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக 2 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதியை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துசெல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் மாவட்ட தலைவர் புஷ்பராஜன், துணைத்தலைவர் வெங்கட்ராமன், யூத் இந்தியா தலைவர் வெங்கட்ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.