கரூர்: கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் தலைமையில், கரூர் கடைவீதி அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (அக்.26) மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மாருதி, துணைத் தலைவர் யோகராஜ், மாநில மகளிர் அணி தலைவி நகோமி உள்ளிட்ட நிர்வாகிகள் கிறிஸ்தவ போதகர்கள் கலந்து கொண்டு, பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணிப்போம் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் கூறியதாவது, “இஸ்ரேலில் யூதர்கள் போரினால் அநியாயமாக கொல்லப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வாகனங்களில் கட்டி இழுத்து வரப்பட்ட வீடியோ ஊடகங்களில் வெளியானதை உலகமே பார்த்துள்ளது.
இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர போர் தாக்குதல் சம்பவத்திற்கு மறைமுகமாக இந்தியாவில் உள்ள இந்திய காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்வரும் அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை கிறிஸ்தவ மக்கள் புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்வார்கள்.
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சி மறைமுகமாக ஆதரவளிப்பது கிறிஸ்தவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மோடி அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர்" - ஆளுநரை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு