கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார். அவருடைய இந்த கருத்துக்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. கமல் மீது குண்டர் சட்டம் பாய வலியுறுத்துவோம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும், நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், அரசியல் பக்குவம் இல்லை என்று தமிழிசையும் தொடர்ந்து கமலுக்கு எதிராக கொதித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கே சில மணித்துளிகள் பேசிவிட்டு இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 காலணிகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. அதேபோல் முட்டையும் வீசப்பட்டன. ஆனால், கமல் மீது எதுவும் படவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றார்.
இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர், முட்டை வீசியவரை பிடித்து தாக்கினர். அவர்கள் தாக்குதலில் இருந்து காவல்துறையினர் அந்த நபரை மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மேடை மீது காலணியை வீசிய ராமச்சந்திரன் என்பவர்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பாஜகவின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் என்று தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது வேலாயுதம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாகக் கூடுவது, பொருட்களை வீசி அவமானப்படுத்துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.