கரூர்: தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.1) அரவக்குறிச்சியில் பரப்புரை செய்கிறார். இதற்காக தமிழ்நாடு வரும் அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப் போவதாக சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் தெரிவித்ததாவது:
”பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை வேட்பாளரான, பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் ஏப்ரல் 1ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகிய மூவரும் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
காவிரி ஆறு பாயும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 300 லட்சம் கோடி மதிப்புள்ள நிலக்கரியும், பல லட்சம் மதிப்புள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவையும் நிலத்துக்கடியில் புதைந்துள்ளன. இதனை, வேதாந்தா தனியார் நிறுவனமும், அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும் எடுப்பதற்கு மத்திய அரசு துணையாக உள்ளது. மேகதாதுவில் அணைகட்டி, தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரைத் தடுப்பதன் மூலம் டெல்டாவை வறண்ட பூமியாக மாற்றலாம் என முயற்சிக்கிறார்கள்.
ஒருவேளை மேகதாதுவில் அணை கட்டி தண்ணீர் தேக்கப்பட்டுவிட்டால், பத்து வருடங்களுக்கு ஒருமுறை கூட விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும்; அதன் பின்னர் நாம் குடிக்கும் தண்ணீருக்கு எங்கே போவோம்? காவிரி கரையில் பிறந்து, தானொரு விவசாயி மகன் என ஒவ்வொரு பொதுக்கூட்டங்களில் பேசி வரும் முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஒரு வார காலமாக மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காப்பத்து வருகிறார்.
மார்ச் 30ஆம் தேதி, தாராபுரத்தில் பரப்புரை செய்த பிரதமர் மோடியும், தமிழ்நாடு முதலமைச்சரும் இது குறித்து வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், 'ஜல்லிக்கட்டு நாயகன்' எனப் பிரதமருக்கு பட்டம் சூட்டுகிறார். உண்மையில் ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்கள் தினமும் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமையை தமிழருடைய வளத்தை நலத்தை தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசும், மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசும் நினைத்துப் பார்க்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எடுபிடியாக தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசும் உள்ளது.
கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இன்று (ஏப்ரல் 1) அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரைக்காக வரும் அமித் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
காவிரி ஆறு தமிழர்களின் பாரம்பரிய உரிமை, காவிரி ஆறு இல்லாமல் தமிழர்களுக்கு வாழ்க்கை இல்லை. ”அமித் ஷாவே திரும்பப் போ, தமிழ்நாட்டிலிருந்து திரும்பப் போ” என்று வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக் கட்சி, மே 17 இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சுயாட்சி இந்தியா, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புகலூர் வேலாயுதம்பாளையத்தில் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு, புதுச்சேரியில் அமித் ஷா இன்று பரப்புரை