கரூர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார திட்டமான ஆத்ம நிர்பார் (சுயசார்பு பாரதம்) என்ற தலைப்பின் கீழ் கரூர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தனக்கென ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவருக்கு எந்த குடும்பமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தியின் குடும்பத்தைப்போல வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை" என்றார்.
மத்திய அரசு நேரடி வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ராகுல் காந்தி கூறிய கருத்து குறித்து செய்தியாளர் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த முருகானந்தம், "ராகுல் காந்தி மத்திய அரசை குறித்து குறை கூறுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை. ஏனென்றால் தினமும் ஒரு பொய், தினமும் ஒரு கட்டுக்கதை என கூறிக்கொண்டே வருகிறார், முதலில் மத்திய அரசு அளிக்கும் நேரடி நன்மை பணப்பரிமாற்றம் தொடர்பாக ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது" என்று ராகுல் காந்தியை விமர்சித்தார்.
இதையும் படிங்க... பண மழையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு: கேள்வி கேட்கும் காங்கிரஸ்