கரூர்: செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தற்பொழுது எம்எல்ஏவாக இருந்துவருகிறார். மேலும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார். திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இம்முறை அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அலுவலருமான அண்ணாமலை நேற்று முன்தினம் (மார்ச் 31) சாத்தப்பாடி ஊராட்சி அருகே உள்ள பூமதேவம் பகுதியில் பரப்புரையின்போது பேசிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
பரப்புரையின்போது, "அரவக்குறிச்சி வேட்பாளர் என்பதைத் தாண்டி மக்களிடம் கலந்துரையாடும்போது வாக்காளர்களுக்கு ஒரு எழுச்சி ஏற்படும் என நம்புகிறேன். தற்போது நடைபெறும் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நாம் இதைச் சாதாரணமான தேர்தலாகக் கொண்டுசெல்லக் கூடாது. அரவக்குறிச்சி தொகுதியில் இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டும் என ஒரு யுக்தியைக் கையாண்டுவருகின்றனர்.
(இடையில் காணொலி ஒளிப்பதிவு செய்யும் செய்தியாளர்களைப் பார்த்து நன்றாக ஒளிப்பதிவு செய்துகொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்)
கர்நாடகாவில் ஐபிஎஸ் அலுவலராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்று எனது சொந்த ஊரான அரவக்குறிச்சியில் உள்ள கிராமத்தில் வேளாண் தொழிலான ஆடு வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டேன்.
என்னைக் கிண்டல் செய்யும் நோக்கில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அரவக்குறிச்சிக்கு வருகைதந்து ஆட்டுக்குட்டியைத் தோளில் தூக்கிப்போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துச் சென்றார். அரசியலுக்கு வந்த பிறகு நான் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கிப்போட்டு மிதித்துவிடுவேன். பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துவிடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய பிராடுகளை நான் பார்த்துட்டு வந்து இருக்கிறேன்.
உன் மேல நான் கைய வச்சா அண்ணாமலை வயலேன்ஸ்காரனா மாத்துவ. அதனால் திமுககாரனுக்கு நான் ஒரு எச்சரிக்கை வச்சுட்டுப் போறேன். அகிம்சைவாதியா அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம், அதை நான் இங்கு காட்டவா காட்டவா" என சினிமா பாணியில் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை மிரட்டல் கொடுக்கும் வகையில் காணொலி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று தேர்தல் பரப்புரையின்போது அண்ணாமலைக்குப் பதிலளித்து கண்டனம் தெரிவித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியின் தரப்பில், "இந்தப் பூச்சாண்டி செயல்களுக்கெல்லாம் எல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை, அண்ணாமலையின் காணொலிப் பதிவை திமுக சட்டப் பாதுகாப்புக் குழு, தேர்தல் ஆணையத்தில் புகாராக வழங்கி நடவடிக்கை எடுக்கக்கூடும்" எனத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரவக்குறிச்சியில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போது திமுகவும் வழக்குத் தொடுக்க உள்ளது.