கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று (மார்ச் 30) அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட தளவாபாளையம், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், மூர்த்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் பாஸ்கரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வடிவேல் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.
அப்பொழுது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து தாமரைப் பூவைக் கொண்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசுகையில்,
"தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த பிரதமர் பெண்களின் பாதுகாப்பு குறித்துதான் அதிகம் உரையாற்றினார். திமுகவினர் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் பிரதமர் உரையாற்றினார். பெண்களாகிய நீங்கள் சிந்தித்து இம்முறை நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் 50 ஆண்டுகாலம் போராடிவந்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிறைவடையும் சூழ்நிலையில் அதிமுக அரசு அதனை நிறைவேற்றி 24 மணிநேரத்தில் அமல்படுத்தியுள்ளது.
இதனால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெறுவார்கள்.
மேலும் சமூகநீதிக்காக அதிமுக கூட்டணி தொடர்ந்து குரல் கொடுக்கும். மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் பார்வை அரவக்குறிச்சி தொகுதியின் மீதுள்ளது. என்னை வெற்றி பெறவைத்து சட்டப்பேரவைக்கு அனுப்புங்கள். உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சட்டப்பேரவையிலிருந்து பணியாற்றுவேன்.
ஊராட்சிப் பகுதிகளில் கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. அதனை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்" என வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: ’அபூர்வ சகோதர்கள்’ கார் முதல் 'பாஜக பிரச்சார வேன்' வரை: வண்டி ஓட்டி லைக்ஸ் அள்ளும் கௌதமி!