கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.26) தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், `தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதிமுறைகளாக முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளது.
இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கரோனா விதிமுறைகளை பின்பற்றி, தகுந்த இடைவெளியை கடைபிடித்து முடிதிருத்தும் நிலையங்கள் மீண்டும் இயங்க அனுமதியளிக்க வேண்டு` என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அச்சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி, `தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கடையடைப்பு செய்துள்ளோம். இதனால், தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள், வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளுடம் கடையை திறக்க அனுமதி வழங்க கோரி மனு அளித்துள்ளோம். அரசு கனிவோடு பரிசீலனை செய்து அழகு நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் செயல்பட விதிவிலக்கு அளிக்க வேண்டும்` எனக் கேட்டுக்கொண்டார்.