கரூர் மாவட்டத்தில் ரயில்வே நிலையம் அருகில் காமராஜ் வணிக மார்க்கெட் உள்ளது. அதன் அருகில் தனியார் வாழை மண்டி சில செயல்பட்டுவருகின்றன. மாவட்டத்தின் குளித்தலை, லாலாப்பேட்டை போன்ற பகுதிகளில் வாழை விளைச்சல் அதிகமாகக் காணப்படும். மேலும் ஈரோடு, நாமக்கல், கோவை போன்ற இடங்களிலிருந்து கரூருக்கு வாழை விற்பனைக்காக வருவது வழக்கம்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக வாழை விளைச்சல் அதிகரித்துள்ளது. விலை குறைவாகக் காணப்பட்டாலும் செவ்வாழையின் விலை மட்டும் உயர்ந்துள்ளது.
இதற்குக் காரணம் சமீபத்தில் வைரலான வாட்ஸ்அப் காணொலி ஒன்றில் செவ்வாழைப் பழத்தை பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் கம்பி, பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் சோப்பால் ஒருவர் தேய்க்கிறார். செவ்வாழைப் பழத்தின் மீது உள்ள சிவப்பு நிறம் மறைந்து பழம் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. இந்தப் பழத்தை சாப்பிடுபவர்களுக்கு ஆபத்து என அந்தக் காணொலியில் கூறப்பட்டிருந்தது.
சமூக வலைதளங்களில் இந்தக் காணொலி வேகமாகப் பரவியதால் மருத்துவ குணம் நிறைந்த செவ்வாழைப் பழத்தை மக்கள் வாங்க மறுத்துவருகின்றனர். இதனால் செவ்வாழைப் பழத்தின் விற்பனை பாதிப்படைந்துள்ளது.
இது குறித்து வாழை மண்டி விவசாயி, "சமூக வலைதளங்களில் வாழைக்காய் குறித்து போலியான வதந்தியை பரப்பிவருகின்றனர். கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வாழைக்காயை புகைமூட்டி காற்றுப்புகாத இடத்தில் அடைத்துவைத்து பழுக்கவைக்கப்படுகிறது. இவற்றில் எந்தவித ரசாயனமும் தெளிக்கவில்லை என்பதுதான் உண்மை.
சமூக வலைதளங்களிலும் செவ்வாழைப் பழ விற்பனையில் நடக்கும் மோசடி என்ற தலைப்பில் பகிரப்பட்ட தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற வதந்தியால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தை யானை கூட்டம் வழிமறிப்பு!