கரூர் மாவட்டத்தில் குளித்தலை, நெரூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் அதிகளவு காணப்படும் பகுதியாக விளங்குகிறது. காவிரி ஆற்றுப் படுகை கொண்ட இப்பகுதிகளில் அதிகமாக வாழைத்தார் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு விவசாயிகள் செயல்படுகின்றனர். இதனை வாழ்வு ஆதாரமாகக் கொண்டு முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு வாழைத்தார் விற்பனையில் பெயர் சொல்லுமளவிற்கு லாபம் கிடைப்பதில்லை எனத்தெரிகிறது.
இடைத்தரகர்களின் குறுக்கீடு அதிகம் காணப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக வாழைத்தார் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அரசு இதில் தலையிட்டு சட்டமியற்ற வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜாராம் (82) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அப்போது ராஜாராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறப்பு வேளாண் மண்டலமாக கரூரை அறிவித்தது. காவிரி பாசனத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்து வாழை சாகுபடி அதிகம் பயன்படுகிறது. இந்த வாழை விவசாயத்தால், ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது.
ஆனால், வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கடன் உதவி ஐம்பதாயிரம் மட்டுமே கிட்டுகிறது. அதனை சரிசெய்யும் விதமாக தனியாரிடமிருந்து கடன் வாங்குகின்றனர், விவசாயிகள். எனவே, எங்களது மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
அவை,
1. அரசு ஒவ்வொரு வாரமும் வாழை விவசாயத்திற்கு விலைப்பட்டியல் நிர்ணயம் செய்து தர வேண்டும்.
2. வாழை விவசாயிடம் இருந்து வாழை பெறுபவர் முறையான லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாழை வாங்க முடியும்.
3. ப்ரோ நோட்டு போட்டு, அதற்கு வட்டி வாங்குவது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவற்றிற்கு மாவட்ட ஆட்சியர் உதவினால் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை: சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு