கரூர் மாவட்டம் கார்விழி ஆற்று பாளையம் அணைக்கட்டு மிகவும் பழமையான அணைக்கட்டுகளில் ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு, முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அணை 1/4 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அளவிற்கு புதுப்பிக்கப்பட்டது.
இந்த அணைக்கட்டு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் நிரம்பாததாலும், கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த அணைக்கட்டு தற்போது முழுக்கொள்ளவை எட்டியதால், பாசனத்திற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய சாயப்பட்டறை கழிவு நீர் நொய்யல் ஆறு வழியாக இந்த அணைக்கட்டில் கலப்பதால், அணையின் நீர்த் தூய்மை கெட்டு விட்டதாக 1999ஆம்ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அணைக்கட்டு நீரை உபயோகிக்க தடை விதித்தது.
இந்நிலையில் 1999ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த இந்த அணையின் நீரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விவசாய நலனுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் கிட்டத்தட்ட 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசனம் பெறும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை அடைத்து, மீண்டும் அணைக்கட்டில் இருந்து மூன்று மாதத்திற்கு திறக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க:கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை