அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர், வேட்புமனு தாக்கல்செய்வதற்கு முன்பு, அதிமுக நிர்வாகிகள் ஆதரவுடன் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான பள்ளப்பட்டியில் இஸ்லாமியப் பெண்களிடம் ஆதரவு திரட்டினார்.
இதனால் பள்ளப்பட்டியில் உள்ள ஜமாத் அமைப்பு தேர்தல் பரப்புரையில் இஸ்லாமியப் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், அது தங்களது மத நம்பிக்கைக்கு எதிரானது எனவும் அங்கிருக்கும் அனைத்து இஸ்லாமியர் குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த அறிவிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது எனச் சமூக செயற்பாட்டாளர் கூறுகின்றனர்.
கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "அரவக்குறிச்சி ஜமாத்தில் எட்டு பேர் கொண்ட தனிநபர்கள் அமர்ந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
பள்ளப்பட்டி இந்தியாவின் ஒரு பகுதியில்தான் உள்ளது. இன்னும் ஐந்து நாள்களில் நிச்சயம் அரவக்குறிச்சிப் பகுதியில் பரப்புரை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சில நாள்களுக்கு முன்பு பள்ளப்பட்டியில் அண்ணாமலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, பள்ளப்பட்டி நகர அதிமுக செயலாளராக உள்ள சாகுல் ஹமீது ஃபேஸ்புக் பக்கத்தில், எம்.எம்.ஜி. தீன் என்ற ஃபேஸ்புக் கணக்கிலிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அரவக்குறிச்சி காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். மிரட்டல் புகாரையடுத்து, அண்ணாமலைக்குப் பரப்புரை செல்லும் பகுதிகளில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடும்பப் பிரச்சினையால் வீட்டைவிட்டு வெளியேறிய கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு!