கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பெற்றிருப்பவர் இளங்கோ. இவர் நேற்று (மே.10) காலை பள்ளப்பட்டி, பரமத்தி, தென்னிலை பகுதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்களை வழங்குவதற்காக சென்றிருந்தார்.
முதலில், பள்ளப்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில் டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர், பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் இன்றி சாலையோரம் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததும், காரிலிருந்து இறங்கி அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, முக கவசம் அணிய அறிவுறுத்தினார்.
விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களை சந்தித்து முகக்கவசம் வழங்கி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார். அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவின் மக்கள் தொண்டு திமுக கட்சித் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.