கரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் அதிமுக உறுப்பினர்களைக் கொண்டே ஆலோசனைக் கூட்டத்தை நடத்திமுடித்துள்ளதாகப் புகார் கூறப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் அன்பழகனிடம் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, அவர்களை (அதிமுகவினர்) தான் அழைக்கவில்லை என்றும் கூட்டம் நடத்தப்படுவதை அறிந்து அவர்களே வந்ததாகவும் ஆட்சியர் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஆட்சியர், தங்களுக்கு (திமுகவினர்) கூட்டம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால், கூட்டத்தில் தாங்களும் கலந்துகொள்ளுமாறும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சியர் என்னும் பொறுப்பிலிருந்து, மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பது நல்லதல்ல எனவும், அவர் ஒரு படித்த முட்டாளாகச் செயல்படுவதாகவும் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜி, அதிமுகவினர் சார்பில் கரூரில் எவ்வித நலத்திட்டங்களும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக சார்பில் கரூரில் 4,100 குடும்பங்களுக்கு உணவுக்கான பொருள்கள் - அமைச்சர் வழங்கல்!