கரூர்: ராயனூரைச் சேர்ந்தவர் வடிவேல் (50). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பரீட்சயமானவர். மேலும் கரூர் மாநகராட்சி அதிமுக 38வது வார்டு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (பிப்.5) இரவு, வடிவேல் கரூர் நகரில் உள்ள முத்துராஜபுரத்தில் இருந்து ராயனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருமாநிலையூர் என்ற இடத்தில் 3 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் வந்து வடிவேலை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்துள்ளனர். இதனால் அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. இதனையடுத்து வடிவேலை மீட்ட அக்கம் பக்கத்தினர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வடிவேல் (வயது 50) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கரூர் பசுபதிபாளையம் காவல் துறையினர், கொலையில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் பலாத்கார வழக்கு - திமுக பிரமுகரின் மகன் கைது!