கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி திருவிக நேற்று (டிசம்பர் 20) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு 8 மணி அளவில் கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை முனியப்பன் கோயில் பகுதியில் அரசு பேருந்துகளை முற்றுகையிட்டு, அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கடுமையான காயங்களுடன் சுக்காலியூர் காட்டுப்பகுதியில் அதிமுக நிர்வாகி சிவராஜை காவல்துறையினர் மீட்டனர். அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கடத்திய நபர்கள் மீது காலைக்குள் வழக்கு பதியவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து அங்கிருந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சகோதரி கவிதா கூறுகையில் ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிவராஜ் கடத்தப்பட்டார். ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் சிவராஜ் மீது தாக்குதல் நடத்தியதுடன், இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் எதையும் பதிவிட கூடாது” என மிரட்டல் விடுத்துள்ளது என்று தெரிவித்தார். பாதுக்காப்பு காரணமாக அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திராவிட கொள்கையை புதைத்து சனாதனத்தை புகுத்த பாஜக அலைகிறது: துரை வைகோ