கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகில் இருக்கக்கூடிய கொளந்தானூர் பகுதியில் வசித்துவருபவர் முந்தைய தமிழ் சினிமாவின் மூத்தத் துணை நடிகை சாரதா (77).
இவர் தமிழில் எம்ஜிஆர், மனோரமா, செந்தில் போன்ற நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் சபாஷ் மாப்பிள்ளை, நாடோடி பாட்டுக்காரன், திசை மாறிய பறவை, நாளை நமதே போன்ற திரைப்படங்களில் நடித்தவராவார். குறிப்பாக இவர் மனோரமாவின் நெருங்கிய தோழியும் ஆவார்.
அதுபோல தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையால் கலைவாணி, பொற்கிளி போன்ற பதக்கங்கள் பெற்றுள்ளார். மேலும் இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரும் ஆவார்.
தற்போது இவர் அரசின் மூலம் கிடைக்கும் முதியோர் உதவித்தொகையானது ரூபாய் 2000, மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது ரூபாய் 1500 வைத்து மருத்துவம், உணவு, வீட்டின் வாடகை போன்றவற்றைச் சமாளித்து வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவருடைய மகன் இறந்ததால் இவரின் வாழ்வாதாரம் மிகவும் குன்றிய நிலையில் காணப்பட்டது. வாழ்வாதாரம் இன்றி தவித்துவந்த இவருக்கு சமூக செயற்பாட்டாளர்கள் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.
மேலும் கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற சமூக செயற்பாட்டாளர், துணை நடிகை சாரதாவுக்கு தேவையான உணவுப் பொருள்கள், காசோலை வழங்கினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பினர்!