கரூர்: குளித்தலை அருகே லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த மாணவி 10 வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 25-ஆம் தேதி மாலை பள்ளியின் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலை, கால், இடுப்பில் படுகாயம் ஏற்பட்டது.
மாணவியை மீட்ட ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் விசாரணை செய்த லாலாபேட்டை போலீசார், அந்த மாணவி நீர்சத்து குறைபாட்டால் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் மாடியில் நின்ற மாணவி மயங்கி கீழே விழுந்து விட்டதாக தந்தை புகார் அளித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் வாக்குமூலம் வீடியோ பதிவு வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மாணவி பயின்று வரும் அரசு பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில், நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு மாணவி ஒருவர், பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஃபோனை கொடுத்து வீடியோ எடுக்க சொல்லி உள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட இந்த மாணவி வீடியோ எடுத்ததாகவும், அப்போது பெண் ஆசிரியர் ஒருவர் மொபைலை பெற்றுக் கொண்டு, இது யார் செல்போன்? இந்த பெண்ணை வீடியோ எடுக்க சொன்னது யார்? என கேட்டு அனைத்து மாணவர்களுக்கு முன்பும் திட்டியதாகவும், அதனால் மன வேதனையடைந்து, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவி கூறியுள்ளார்.
இதனிடையே, கரூர் லாலாபேட்டை போலீசார் பெற்றோரிடம் ஆசிரியர்களைக் காப்பாற்றுவதற்காக தனது மகளுக்கு தலைசுற்றல் இருப்பதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு லாலாபேட்டை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசெல்வன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், லாலாபேட்டை காவல்துறை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியைத் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கற்பகம் என்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் கேட்ட பொழுது, கல்வித்துறை சார்பில் மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில் பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது