கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி(29). இவர், 2017ஆம் ஆண்டு வீட்டின் அருகாமையில் வசித்த சிறுமி ஒருவருக்கு மதுபோதை பழக்கம் ஏற்படுத்தி, அவரை கடத்திச் சென்று திருப்பூரில் வைத்து அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தார். இச்சம்பவத்தின் பின்னணியில் குமுதவல்லி(36), கல்பனா(32), சந்தியா(36), பிரதாப்(29), சிவகுமார்(36), மணி(36) ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சசிகலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளி சரண்யாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு 10 வருட சிறை தண்டனையும், 13 வருடம் சிறை தண்டனையும் , ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இரண்டு, மூன்று, ஏழாவது குற்றவாளிகளுக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், 3 வருடம் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். ஆறாவது குற்றவாளி சிவகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் ஒரு லட்சமும் அபராதம் விதித்தார். இதில் நான்காம் குற்றவாளி சந்தியா, ஐந்தாம் குற்றவாளி பிரதாப் ஆகியோர் மட்டும் இவ்வழக்கில் இருந்து அவர் விடுவித்தார்.
இதையும் படிங்க: அன்னையிடம் ஆசி பெற்ற தலைமை நீதிபதி..!