கரூர் அருகேயுள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-பத்மாவதி தம்பதி. இவர்களது மகள் ஸ்ரீ தர்ஷினி (17) தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் நகரத்தார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை (செப். 22) காலை மாணவி ஸ்ரீதர்ஷினி அவரது தாய் பத்மாவதியுடன் இணைந்து 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் 72 மணி நேரம் தொடர் கை குலுக்கி சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
உணவு உண்ணாமல், உறங்காமல் நின்றபடியே சாதனை செய்யும் இவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.
இது குறித்து போட்டியின் நடுவர்கள் கூறுகையில், "தொடர் கைகுலுக்கும் சாதனையை இதுவரை 43 மணிநேரம் செய்துள்ளனர். அந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் 72 மணிநேரம் தொடர் கைகுலுக்கும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இளம் வயதில் சாதனை படைக்க வேண்டும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம் பெற வேண்டும் என்ற ஆசையைத் தனது தாயிடம் பள்ளி மாணவி கூறியுள்ளார்.
அவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த 72 மணி நேரத்திற்குப் பிறகு செப்டம்பர் 25ஆம் தேதி காலை இந்தச் சாதனை முயற்சி நிறைவுபெறவுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குறைந்த செலவில் சிஎன்சி இயந்திரம் உருவாக்கி மாணவர் சாதனை