கரூர்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் இரண்டு ஆசிரியர்களுடன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வந்தனர்.
கரூர்- திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரை இணைக்கும் மாயனூர் கதவணையில் இடைநிலை ஆசிரியர் ஜெபசகயூ இப்ராகிம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் உடன் 13 மாணவிகள் இன்று மதியம் 1 மணியளவில் மாயனூர் கதவணை மற்றும் மற்றும் பூங்கா ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர்.
பின்னர், கதவணை அருகே குளித்துக்கொண்டிருக்கும் பொழுது, 4 மாணவிகள் நீரில் மூழ்கி மாயம் ஆனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாயனூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு அளித்த தகவல் அடிப்படையில், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி நான்கு மாணவியின் உடலை சடலமாக மீட்டனர்.
தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிரிழந்த நான்கு மாணவிகளின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர ஊர்தி மூலம் உயிரிழந்த நான்கு மாணவிகளான இனியா (11), லாவண்யா(11), தமிழரசி(13), சோபிகா(12) ஆகியோரின் உடல்களை மருத்துவர்கள் பரிசோதித்து உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பொட்டுமணி மற்றும் 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சைபர் கிரைம் குற்றங்களைத் தவிர்க்க சில டிப்ஸ்... அரியலூர் காவல் துறையின் கலக்கல் பிரசாரம்!