கரூர்: க.பரமத்தி அருகே உள்ள குப்பம் கிராமம் நொச்சிக்காட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி மீனாட்சி (60). கணவரைப் பிரிந்து 20 ஆண்டுகளாகத் தனியாகத் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார்.
நேற்று (நவம்பர் 21) இரவு 11 மணியளவில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்றனர்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்தவெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் குறித்து க. பரமத்தி காவல் துறையினர் (k paramathi police station) வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூவரைத் தேடிவருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், க. பரமத்தி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மூதாட்டி வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் திருடுபோகவில்லை என்பது தெரியவந்தது. மூதாட்டியைக் கொலைசெய்ய திட்டமிட்டு இச்சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Bike Caught Fire: சென்னை பிரதான சாலையில் கொளுந்துவிட்டு எரிந்த பைக்