கரூர்: புலியூர், கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் அன்பரசன் - சங்கரி தம்பதியினர். அன்பரசன் அப்பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களது இளைய மகன் பாரதி(10) கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகப் புலியூரில் இருந்து, தனது பாட்டி ஊரான புகலூர் அருகே உள்ள செம்படாபாளையத்தில் உள்ள வீட்டுக்கு பாரதி சென்றுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, சிறுவன் பாரதியும் அவரது சித்தப்பா மோகன்ராஜ்(40) ஆகிய இருவர் மட்டும், வீட்டில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்பொழுது சிறுவன் பாரதி, டிவி ரிமோட்டை தன் வசம் வைத்துக் கொண்டு, சித்தப்பாவிடம் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மோகன்ராஜ் அறிவாளால் சிறுவன் பாரதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிறுவன் பாரதி, சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வேலாயுதம்பாளையம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், அப்பகுதி மக்கள் மோகன்ராஜைப் பிடித்து கயிறால் கட்டி போலீசாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சிறுவனின் தாய் சங்கரி அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ராஜேஷ், குற்றவாளி மோகன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 2009ஆம் ஆண்டு மோகன்ராஜ் 5 வயது சிறுமியை வெட்டி படுகொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் இருந்து கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு தான், விடுதலை ஆனார் என்பதும், அதன் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல், சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப் பாட்டியின் வீட்டுக்குச் சென்ற சிறுவனை சித்தப்பா வெட்டியதில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; 17 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்!