கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகா சபா, தமிழக சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் சார்பில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன .
இந்தச் சிலைகளின் விஜர்சன விழா கடந்த இரண்டு தினங்களாக நடந்தன. விஜர்சன விழாவின் கடைசி நாளான இன்று மாவட்டம் முழுவதும் சொத்தவிளை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் உட்பட 11 இடங்களில் சுமார் இரண்டு ஆயிரம் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
இந்து முன்னணி சார்பில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலிலிருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் வழுக்கம்பாறை, கொட்டாரம் வழியாக முக்கடல் சங்கமம் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் ஊர்வலமானது கன்னியாகுமரி வந்தடைந்தது. பின்னர், விநாயகர் சிலைகள் முக்கடல் சங்கமத்தில் கொண்டுவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
இதனிடையே, இரவிபுதூர் பகுதியில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் டெம்போவில் எடுத்துச் சென்றனர். வழுக்கம்பாறை அருகே வந்தபோது அந்த வாகனத்திலிருந்த இளைஞர் திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.
இதில், அவர் மீது டெம்போ ஏறிய இறங்கியது. உடல் நசுங்கி உயிருக்குப் போராடிய அந்த நபரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். இதில், உயிரிழந்த இளைஞர் இரவிபுதூர் பகுதியைச் சேர்ந்த தானப்பண் என்பவரின் மகன் விக்னேஷ் (24) என்பதும், கட்டட தொழில் செய்துவருகிறார் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.