கடந்த சில நாட்களுக்கு முன்பு அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோயில் கதவு உடைக்கப்பட்டு, சாமி சிலையும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய காவல் துறையினர், கொள்ளை முயற்சி நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக ஊகித்ததையடுத்து கொள்ளை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கோயில் கதவு உடைப்பும் சிலை சேதப்படுத்தலும் நடைபெறவில்லை என முடிவுக்கு வந்த தென்தாமரைகுளம் காவல் துறையினருக்கு கோயிலின் அருகில் கேட்பாரற்று கிடந்த கைப்பேசி ஒன்று கிடைத்தது. இதனை வைத்து விசாரணையை தொடர்ந்தபோது, அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையை சேர்ந்த பால்துரை என்பவரது மகன் ரமேஷ்(24) என்ற இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரிக்கத் தொடங்கினர்.
விசாரணையில், ரமேஷ் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் கடந்த கோயில் கொடை விழாவின்போது ரமேஷை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அகஸ்தீஸ்வரத்திலுள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று அம்மனிடம் தன்னைத் தாக்கியவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டுமென வேண்டுதல் செய்துள்ளார். ஆனால் அந்த நபர்களுக்கு அம்மன் தண்டனை ஏதும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ரமேஷ், ’நீ இங்கு இருந்து என்ன பிரயோஜனம் ?’ என்று கூறி கோயில் கருவறை அருகில் உள்ள ஜன்னலை திறந்து அம்மன் சாமி சிலையை கம்பால் தாக்கி உடைக்க முயன்றுள்ளார். இதில் அம்மன் சிலை சேதம் அடைந்துள்ளது.
பின்னர் அப்பகுதி ஆட்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகோரி அரசிடம் மீனவர்கள் மனு