கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலணி பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகன் ஜார்ஜ் எடிசன் (42) இவர் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.
அவரது தம்பி மார்டின் ஜெயராஜ் (40) கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக மனைவிகளை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர். அண்ணன் தம்பி இருவருமே கூட்டாக வீட்டிலிருந்து மது குடிக்கும் பழக்கம் உடையவர்கள்.
இந்நிலையில், நேற்றிரவு (நவ.30) வீட்டில் இருவரும் சேர்ந்து அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் மது அருந்தும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் கராத்தே பாணியில் அண்ணன் ஜார்ஜ் எடிசன் தம்பி ஜெயராஜை உதைத்துள்ளார்.
அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தம்பி மார்டின் ஜெயராஜ் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மார்டின் ஜெயராஜ் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் தனது சகோதரர் ஜார்ஜ் எடிசனின் மார்பில் பலமாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த எடிசன் மயங்கிய நிலையில் விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மார்டின் ஜெயராஜ், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். போகும் வழியில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் “அண்ணன் கீழ விழுந்து அடிபட்டதில் மயங்கிட்டாருணு சென்னால் போலீஸ் என்கிட்ட விசாரிப்பாங்களா” என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதனைக் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர், பூதப்பாண்டி காவல் துறையினரும் மருத்துவமனை வந்த நிலையில், கத்தியால் குத்தி கொலை செய்த மார்டின் ஜெயராஜை கைது செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணியை கண்டித்த தம்பி கொலை: ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை