கன்னியாகுமரி அருகே உள்ள சிலுவை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் சுனிதா(40). இவரது கணவர் மரிய டல்லஸ்(45). இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் இருவரும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் சங்கு மாலைகள், பேன்சி சம்பந்தமான பொருட்கள் உள்ளிட்டவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி அடி தாங்க முடியாமல் ஓடியுள்ளார். துரத்திச் சென்ற மரியடல்லஸ் வீட்டின் முன்பு இருந்த சுமார் 25 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு தலையில் பெரிய கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுனிதா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சுனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் ரீத்தம்மாள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மரிய டல்லஸ்ஸை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட நண்பனைக் கொன்ற இளைஞர்!