கன்னியாகுமரி: திங்கள்சந்தை அருகே தெங்கன்திட்டைவிளையைச் சேர்ந்த கணேஷ், பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டிவருகிறார். இவரது மனைவி அனிதா (28). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பமுற்ற மனைவி அனிதாவை, ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று (ஜூலை 10) அழைத்துவந்தனர். அவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர். அங்கிருந்து நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனிதா அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், அனிதாவிற்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது.
இதைக் கண்டு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி, மருத்துவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தொலைபேசியில் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி, ஆம்புலன்ஸில் இருந்தபடியே அனிதாவிற்கு பிரசவம் பார்த்தார். நல்வாய்ப்பாக அனிதாவுக்கு ஆரோக்கியமான நிலையில் குழந்தை பிறந்தது.
பின்னர் அவர் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய் ராஜ் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய செவிலியர்!