குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் சரகத்திற்குள்பட்ட அமராவதி விளையில் உள்ள ரோஜ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய் கம்பெனி ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31). இவர்களுக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கணவர் வெளிநாட்டில் இருப்பதால், ஆக்னஸ் நந்தா, தன் தாய், தந்தையருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக செல்வராஜாவுக்கும் நந்தாவுக்கும் இடையே செல்போனில் பேசும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று (அக். 22) கணவருடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு முற்றியதால், கணவர் முன்பே விஷம் குடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
ஆக்னஸ் நந்தாவின் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார். இந்தச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.