குமரி மாவட்டம் வெள்ளிமலை ஆசிரம சமய வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா வருகின்ற 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக, வெள்ளிமலை ஆசிரம நிர்வாகி சுவாமி சைதன்யானந்தா, அமிர்தா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி இயக்குநர் சங்கர சைதன்யாnaந்தா, சேவாபாரதி தமிழக, கேரள மாநிலச் செயலாளர் பத்மகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, ‘வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபிடம் சார்பில் நடத்தப்படும் சமய வகுப்புகளில் தொடக்க நிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என ஐந்து நிலைகளும் இதில் தேறியவர்களுக்கு வித்யா ஜோதி என்ற பட்டமும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்தில் வைத்து இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. முதல் பட்டமளிப்பு விழா கடந்த 1990ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற நிலையில், தற்போது 30ஆவது பட்டமளிப்பு விழா, நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. வித்யாஜோதி பட்டம் இதுவரை 616 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு 29 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து, 29 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி, விழா மலரை வெளியிட்டு வாழ்த்தி பேச இருக்கிறார். சத்குரு மாதா அமிர்தானந்தமயி தேவி சிறந்த மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி ஆசி வழங்குகிறார்’ என்று கூறினர்.