குமரி மாவட்டம் 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டமாகும். இங்கிருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு மத பேதமின்றி சென்று வருகின்றனர்.
எனினும், குமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் வசதி எதுவும் இல்லை.
இதனால் பொதுமக்கள் பேருந்துகளையும், இணைப்பு ரயில்களை நம்பியும் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்து வருகின்றனர். இதேபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்தும் ஏராளமான பயணிகள் வேளாங்கண்ணிக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.
எனவே குமரி மாவட்ட பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி இரவு நேர ரயிலை இயக்க வேண்டுமென கன்னியாகுமரி ரயில் பயணிகள் சங்கம் கடந்த எட்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.
எனவே தங்கள் கோரிக்கையை ஏற்று வேளாங்கண்ணிக்கு ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.