மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அண்மையில் டெல்லியில் சிஏஏ-வுக்கு எதிராக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை நாடு முழுவதும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தக் கலவரத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. டெல்லி கலவரத்தை பாஜக அரசும் அதன் தலைவர்களும் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் திட்டுவிளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்ட மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், "சிஏஏ-சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்தியாவை மத உணர்வில் கட்டமைக்க நினைக்கிறது. அதனோடு, மொழி உணர்வை சிதைத்து, மக்களை மடமையாக்கும் முயற்சியை மத்தியில் ஆளும் பாஜக செய்துக்கொண்டிருக்கிறது. இந்திய தேசியம் என்பது மதவாத தேசியம் என உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
எனவே, டெல்லி கலவரத்தைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நாளை நடக்கவிருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து!